திங்கள், 8 நவம்பர், 2010

கணக்கில் வருமா கருப்பு?


கருப்பு பணம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடக்கிப் போடும் விஷப்பாம்பு. வெளிநாடுகளின் வங்கிகளிலும் பெரிய பெரிய மாளிகைகளின் ரகசிய அறைகளில் தங்கம், வெள்ளிக் கட்டிகளாகவும் முடங்கிக் கிடக்கிறது பல ஆயிரம் கோடி கருப்பு பணம். சமீப காலமாக ரியல் எஸ்டேட் துறையில் ஏகத்துக்கும் கருப்புப் பணம் புழங்குவதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.72 ஆயிரம் கோடி அளவுக்கு ரியல் எஸ்டேட்டில் பணம் புழங்குகிறது. இது ஆண்டுக்கு 30 சதவீதம் வரை உயர்ந்து கொண்டே வருகிறது. ஆசிய நாடுகளில் ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அதிகரித்து வரும் விலை காரணமாக, எப்போதும் இல்லாத அளவுக்கு பெரிய பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இத்துறையில் குதிக்கின்றன. மற்ற எந்த துறையிலும் இந்த அளவுக்கு கருப்பு பணம் புழங்குவதில்லை. வீடோ, நிலமோ வாங்கும்போது, பத்திரச் செலவைக் குறைக்கும் நோக்கில் சொத்தின் மதிப்பு குறைத்து மதிப்பிடப்படுகிறது. மீதத் தொகை கருப்புப் பணம். கணக்கில் வராது. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், கோல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் இடம் கிடைக்காது. அதனால் என்ன விலை கொடுக்கவும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் பெரிய பில்டர்களும் தயாராக உள்ளனர். இப்படி கொடுக்கும் தொகையில் பாதிக்குப்பாதி கருப்புப் பணம்தான். கடந்த டிசம்பரில் வருமான வரித் துறையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்திரூ4,500கோடி கருப்புப் பணத்தை கைப்பற்றினர். இதில் ரூ2 ஆயிரம் கோடி வரை ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
வருமான வரி அதிகமாக இருப்பதால்தான் கணக்கு காட்டாமல் மறைத்து, கருப்பு பணம் கோடிக் கணக்கில் உருவாகிறது. சம்பாதிப்பதில் பாதிக்குப் பாதி கருப்புப் பணமாக பதுக்கப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களின் கணக்குப்படி 22.50 லட்சம் கோடி கருப்புப்பணம் புழங்குகிறது. 2006ம் ஆண்டு நிலவரப்படி, 1.40 லட்சம் கோடி அளவுக்கு இந்தியர்களின் கருப்புப்பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கிறதாம். ம¦தமுள்ள 20 லட்சம் கோடி தங்கக் கட்டிகளிலும் நிலங்களிலும் முதலீடு செய்யப்படுகிறது. இந்தப் பணம் கணக்கில் வந்தால், இந்தியா எப்போதோ வல்லரசாகி இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக